6 வருடங்களுக்குப் பிறகு திருப்பதி தரிசனம்... அடுத்து  பெத்தா தர்கா... சூப்பர்ஸ்டார் ஆன்மீக பயணம் ..!! 

 
1

நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை கடந்த 12-ம் தேதி கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்த நிலையில், அவரை காண்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு வழக்கம்போல் வாழ்த்து கூறுவதற்காக ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ‘அவர் ஊரில் இல்லை எனவும் அவரது சார்பாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து ரசிகர்களைச் சந்தித்திருப்பார்’ என்றார்.

Rajinikanth

இந்த நிலையில் ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக நேற்று இரவு புறப்பட்டு திருப்பதி சென்றார் ரஜினி. அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சென்றிருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் ரஜினிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு அவரை அழைத்து சென்றனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாவை செயல் அதிகாரி தர்மா ரெட்டி கோவில் மகா துவாரம் முன்பு வரவேற்று சுவாமி தரிசனம் செய்துவைத்தார்.பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். இதனையடுத்து வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு வாழ்த்து தெரிவித்தேன். 6 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. சாமியை தரிசிக்க வந்த இடத்தில் வேறு  எதையும் பேச விரும்பவில்லை ” என்றார்.

1

இதையடுத்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற பெத்தா தர்காவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அப்போது அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார். 

From Around the web