மன்னிப்பு கோரினார் விக்னேஷ் சிவன்!!

 
1

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்கேஷ் சிவன் இடையிலான திருமணம் மிக பிரம்மாண்டமாக சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாரூக்கான உள்ளிட்ட பலரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரம்மாண்ட திருமணம் பற்றியும் விருந்து நிகழ்ச்சிகளைப் பற்றிதான் பலரும் பேசி வருகின்றனர். ஆதரவற்ற ஒரு லட்சம் பேருக்கு விருந்து பரிமாறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இவர்கள் இருவரும் அடிக்கடி திருப்பதி செல்வது வழக்கம். இதனால் திருமணம் முடித்த கையோடு இருவரும் திருப்பதிக்குச் சென்று வழிபட்டனர்.

Nayanthara

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சாமி தரிசனம் செய்துவிட்டு இருவரும் மாடவீதி வழியாக நடந்து வந்தனர்.அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களுடன் போட்டோ எடுக்க வந்த புகைப்படக்காரர்களும் காலில் செருப்புடன் நடந்து வந்தனர். மாட வீதியில் செருப்பு அணிந்து நடக்க வேண்டாம் என்று ஆங்காங்கே போர்டுகள் வைக்கப்பட்டிருந்தும் இவர்கள் செருப்பு அணிந்து நடந்தது சர்ச்சையானது.

இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றிய செய்திகள் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் இதுகுறித்து தொலைபேசி மூலம் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இது தெரியாமல் நடந்த தவறு. எனவே நடந்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் வகையில் கடிதம் அல்லது வீடியோ ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வெளியிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்புள்ள அனைவருக்கும், எங்களுடைய திருமணத்தை நாங்கள் திருப்பதியில் நடத்தவே திட்டமிட்டிருந்தோம். ஆனால், சில நிர்வாக காரணங்களால் எங்களுடைய திருமணத்தை திருப்பதியில் நடத்த முடியாததால் சென்னையில் நடத்தினோம். திருமணம் முடிந்த கையோடு மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதிக்கு சுவாமி கல்யாணம் பார்ப்பதற்காகவும், கடவுளின் ஆசிர்வாதம் பெறுவதற்காகவும் வந்தோம். அந்த அளவுக்கு எங்களுக்கு கடவுளின்மேல் மிகுந்த பக்தி உள்ளது.

Vignesh-letter

சிறப்பான தரிசனம் கிடைத்தது. அந்த நாளை மறக்க முடியாத தருணமாக மாற்றும் வகையிலும், எங்களுடைய  திருமணம் முழுமையடைந்ததாக உணரும் வகையிலும் திருப்பதி கோயிலுக்கு வெளியே இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அப்போது, அங்கு ஏற்பட்ட கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்தோம். அந்த அவசரத்தில் நாங்கள் காலில் செருப்பு அணிந்திருப்பதை அறியாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் கோயிலுக்கு தவறாமல் சென்றுவருபவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள். எங்களுடைய திருமணத்தை திருமலையில் நடத்துவதற்காக கடந்த 30 நாட்களில் 5 முறை வந்து சென்றுள்ளோம்.

எங்களுடைய செயல் யாரையாவது புண்படுத்தியிருந்தார்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு அவமாரியாதை செய்ய நினைக்கவில்லை. எங்களுடைய இந்த சிறப்பான நாளில் வாழ்த்து மற்றும் அன்பு தெரிவித்த அனைவருக்கும் நன்றியுடையவர்களாக இருப்போம். தொடர்ந்து, நேர்மறையான வாழ்த்தை மட்டுமே எங்களுக்கு வழங்குவீர்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

From Around the web