சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு யார் காரணம் - தயாரிப்பாளர் விளக்கம்..!!

டாக்டர், டான் என தொடர் வெற்றியைக் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி, சூரி,ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இந்த படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு படம் என்ற சிறப்பையும் பெற்றது. மேலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்ததால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆனால் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட காமெடி காட்சிகளாலும், சொதப்பலான திரைக்கதையாலும் பிரின்ஸ் படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தை பெற்றுள்ளது. இதனால் படம் வெளியாகி சில தினங்களிலேயே பல ஸ்கிரீன்களிலும் பிரின்ஸை நீக்கிவிட்டு சர்தார் படம் போடப்பட்டது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், “ஒரு படம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குநர் தான் காரணம். மேலும் படத்திற்கு செலவு செய்த தயாரிப்பாளர்களும், கதை எழுதிய கதாசிரியர்களும் தான் காரணம்.
தம்பி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு வெளியான பிரின்ஸ் படம் வெற்றி பெறவில்லை. அதற்கு அந்த படத்தின் இயக்குநர் தான் காரணம்.” என்றார்.