நீட் தேர்வினால் என் குடும்பத்திலும் ஒரு தற்கொலை: சாய் பல்லவி..!

 
சாய் பல்லவி

நீட் தேர்வுக்கு பயந்து 18 வயது ஆகாத மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிப்பதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி பேட்டி அளித்திருந்தார். அதில், மருத்துவப் படிப்பு தேர்வுக்கான வினாக்கள் எங்கிருந்து கேட்கப்படும் என்று சொல்ல முடியாது. அதற்காக மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம்.

அதனால் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான் உறுதுணையாக இருக்க வேண்டும். நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி அவர்களை மன வலிமையூட்ட வேண்டும்.

அப்படி செய்ய தவறியதால் என் குடும்பத்திலும் ஒருவர் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் அதிக மதிப்பெண் தான் எடுத்திருந்தார். ஆனால் தாழ்வு மனப்பான்மை காரணமாக இந்த சோக முடிவை அவர் எடுத்துவிட்டார்.

தற்கொலை செய்துகொள்வது தவறான முடிவு. அதை நினைத்துப் பார்க்கக் கூடாது என்று நாம் எளிதாக பேசிவிடலாம். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் நிலைமை புரியும். எப்படிப்பட்ட மனநிலையில் இருந்து மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர் என்று பார்க்க வேண்டும்.

தேர்வுக்கு பயந்து 18 வயது கூட நிரம்பாத மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது வேதனையை தருகிறது. அவர்களுடைய வலி எனக்கு நன்றாக புரிகிறது. இந்த விஷயத்தில் நான் எப்போதும் மாணவர்களின் பக்கம் என்பதை தெளிவாக கூறுகிறேன் என சாய் பல்லவி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 

From Around the web