60 வயதில் கல்யாணமா?: ஆமீர் கான் சொல்வதென்ன..!

 
1

 ஆமீர் கானும், கவுரியும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள்.சுமார் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வரும் கவுரியை தன் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஆமீர். அன்பான, அக்கறையான ஜென்டில்மேனை தேடியபோது ஆமீர் கான் மீது காதல் வந்ததாக கவுரி ஸ்ப்ராட் தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் ஏன் கவுரியை காதலிக்கிறீர்கள் என ஆமீர் கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,


நான் அவர் அருகில் இருந்தால் எனக்கு அமைதி கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட நபர் வேண்டும் என்று நினைத்தபோது கவுரி கிடைத்தார். எனக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகிவிட்டது. 60 வயதில் திருமணம் செய்து கொள்வது எனக்கு சரியாக இருக்காது. இருந்தாலும் பார்க்கலாம்.


பெங்களூரில் வளர்ந்தவர் கவுரி. அவர் பல விதமான படங்களை பார்த்திருக்கிறார். அதனால் இந்தி படங்களை அவர் பார்க்கவில்லை. எனவே, என் படங்களை அவர் பார்க்கவில்லை. தற்போது கவுரியை மீடியாவுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து மீடியாவை எதிர்கொள்ள அவருக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.மேலும் கவுரிக்கு பாதுகாவலரை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார்.


ஆமீர் கானுக்கு முதல் இரண்டு திருமணங்கள் மூலம் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். கவுரிக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறார். கவுரியை ஆமீர் கானின் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டார்கள். ஆமீர் கானின் 60வது பிறந்தநாள் பார்ட்டியில் கவுரி மட்டும் அல்ல முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா, கிரண் ராவ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


தன் முன்னாள் மனைவிகளை அடிக்கடி சந்தித்து பேசி வருபவர் ஆமீர் கான். இதை அவர் பலமுறை கூறியிருக்கிறார். அதனால் அவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு முன்னாள் மனைவிகள் வந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆமீர் கானால் மட்டும் முன்னாள் மனைவிகளுடன் எப்படி இப்படி நட்பாக இருக்க முடிகிறது என பலர் வியக்கிறார்கள்.


பாலிவுட்டின் மூன்று முக்கியமான கான்களாக ஷாருக்கான், ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோர் இருக்கிறார்கள். அதில் ஷாருக்கானின் மனைவி பெயர் கவுரி. தற்போது ஆமீர் கானுக்கு கிடைத்திருக்கும் காதலியின் பெயரும் கவுரி. இதையடுத்து சல்மான் கானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From Around the web