பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!

ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சி மிகுந்த பதிவு ஒன்றினை தற்பொழுது வெளியிட்டு, இந்த பிரிவுக்குப் பின்னால் இருப்பது பணமோ, அதிகாரமோ அல்ல, மூன்றாவது நபர் தான் காரணம் என விளக்கமளித்துள்ளார். இப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் மீடியா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : “கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் அவர் தன் பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே! எங்கள் பிள்ளைகள் இன்று படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது! அவர்களது தொலைபேசிகள் எப்போதும் உபயோகத்தில் இருந்தும் அவர்களின் அப்பா அழைக்காத காரணம் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், எந்த சக்தியும் அவரைத் தடுத்திருக்க முடியாது. நிச்சயம் வந்து சந்தித்திருப்பார்.எங்கள் குழந்தைகள் அவர்கள் தந்தையை சந்திப்பதை மிகவும் விரும்புகிறார்கள், ஆனால் அவர்களது தந்தை வழி பாட்டி-தாத்தா வீடு அல்லது எங்கள் அலுவலகம் போன்ற நன்கு அறிந்த பொது இடங்களில் அப்பாவை சந்திக்கும் போது மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறோம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்:
அதை விட்டு யார் எங்கள் பிள்ளைகளின் மன அமைதியைப் பறித்தாரோ அவர் வாழும் இடத்தில் அவர்களின் தந்தையைச் சந்திக்க நிர்பந்தப்படுத்தப்படுவது, அவர்களை மேலும் அவர்கள் தந்தையை விட்டு விலகச் செய்துவிட்டது. குழந்தைகளை அவரிடம் இருந்து அப்புறப்படுத்தியுள்ளேன் என உருகும் அவர், அவர்களை சந்திக்கவோ அல்லது அவர்களை தன் பொறுப்பில் ஒப்படைக்கும் படியோ சட்டப்பூர்வமாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.
என் கணவர் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள இயலா நிலையில் இருந்த போது இங்கு நடந்த ஒரு சிறு கார் விபத்து, ஆண்டவன் அருளால் என் குழந்தைகளுக்கு எந்த துன்பமும் ஏற்படுத்தாத அந்த விபத்தில் சேதமடைந்த காரை சரி செய்ய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்பட்டன. அதை எடுத்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் என்னை உள்ளே கூட நுழைய விடாமல் காவலர்கள் வெளியேற்றினார்கள். சட்டப்படி எனக்கும் உரிமையுள்ள ஒரு இடத்திலிருந்து அவமானப்படுத்தி அனுப்பப்பட்டேன் என்பது தான்.
அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப் பட்டதாக சொல்கிறார்! மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை, நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறுவதைக் கேட்கும் போது வேதனையில் சிரிப்புதான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும், அது அவரது விருப்பத்தினால் தான் இருந்திருக்க முடியுமே தவிர, கட்டாயத்தினால் அல்ல.
தனது சொத்துகளை, கௌரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. நன்றாக முன் கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள Range Rover காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார்.
உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி "தொலைத்த பெற்றோர்கள்"என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் கூறுகிறார், அப்படியானால், ஏன் இத்தனை ஆண்டுகள் வரை காத்திருந்தார்? ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்? அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில் தான் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதன் காரணம் பயம் அல்ல அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்வைக் காப்பாற்ற முடியாமல் போனதே.
வீட்டோடு மாப்பிளையாக இருந்தேன் என்ற அவரின் குற்றச்சாட்டும் பொய்யானது. எங்களுக்கு திருமணமான நாள் முதல் நாங்கள் என் மாமனார், மாமியாருடன் புகுந்த வீட்டிலும் மற்றும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார் பேட்டையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் உள்ள இரண்டு வீடுகளில் மட்டுமே வசித்தோம். கொரோனா காலத்தில் நாங்கள் வீடு மாற்றம் செய்த ஓரிரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதும் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியதே இல்லை.
எங்கள் பிள்ளைகளை கருவிகளாக்கி என் தாய்மையை அனுதாபத்திற்கு உரியதாக்கி ஆதாயம் தேட நினைப்பவள் நான் அல்ல. என்னை அவ்வாறு நினைப்பவர்கள் உண்மையில் ஒரு தாயின் சிறப்பை உணராதவர்களே!
நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒரு போதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை. ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.