கைவிடப்படும் துப்பறிவாளன் - 2?

 
கைவிடப்படும் துப்பறிவாளன் - 2?

எந்தநேரத்தில் மிஷ்கினை பகைத்துக் கொண்டு துப்பறிவாளன் 2 படத்தை விஷால் கைப்பற்றினார் என்பது தெரியவில்லை, அடுத்தடுத்து தொடர்ந்து சறுக்கல்களையே அவர் சந்தித்து வருகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சூட்டோடு சூட்டாக துப்பறிவாளன் 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் மிஷ்கில் மற்றும் விஷால் இருவருக்குமிடையே கருத்து மோதல் உருவானது. இதனால் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்குவதாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டார் விஷால். ஆனால், அதை தொடர்ந்து இப்படத்திற்கான எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. ஷூட்டிங் பாதியிலே நின்று போனது.

விஷால் நடித்து முடித்த ‘சக்ரா’ படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. பாக்ஸ் ஆஃப்ஸில் படுதோல்வி அடைந்ததால் விஷால் மிகவும் வருத்தம் அடைந்தார். அப்போது தான் ஆனந்த் சங்கர் இயக்கும் ’எனிமி’ படத்தில் விஷால் கமிட் ஆனார்.

அந்த படத்தில் ஆர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் விஷால் நடிக்கும் 31-வது படம் என்கிற அறிவிப்புடன் புதிய படத்தில் தகவல் வெளியிடப்பட்டது. 

இதனால் துப்பறிவாளன் 2 படத்தை அவர் கைவிட்டுவிட்டாரோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. விஷாலின் அடுத்த வெளியீடாக ‘எனிமி’ படம் இருக்கும். அதை தொடர்ந்து அவர் நடிக்கும் 31வது படம் வெளியாகும். இதனால் விஷால் இயக்குவதாக துப்பறிவாளன் 2 கடந்து போன கதை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 
 

From Around the web