நெகிழ்ச்சி செயல்..! 1 வருடத்திற்கு முன் இளம்பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய கேபிஒய் பாலா..!
கேபிஒய் பாலா பல சமூக சேவை செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பது, உடல் நலம் இல்லாதவர்களுக்கு சிகிச்சை செய்ய பணம் கொடுப்பது, பொருளாதார கஷ்டம் காரணமாக கல்வி தடை பட்டவர்களுக்கு பணம் கொடுத்து கல்வியை தொடர வைத்தது, பெண்களுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தது உள்பட பல உதவிகளை செய்து உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அந்த வகையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் நடக்க முடியாமல் இருந்ததை கேள்விப்பட்ட கேபிஒய் பாலா, உடனடியாக அவருக்கு சிகிச்சை செய்வதற்கு தேவையான பணத்தை கொடுத்தார். அதுமட்டுமின்றி சிகிச்சை முடிந்ததும் பிசியோதெரபி செய்வதற்கு மீண்டும் வந்து உங்களுக்கு பணம் கொடுப்பேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை முடிந்து தற்போது ஓரளவுக்கு அவர் நடக்க தொடங்கிய நிலையில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் தற்போது பிசியோதெரபி செய்வதற்காக 45 ஆயிரம் ரூபாய் அவருடைய வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார்.
கேபிஒய் பாலாவை பார்த்ததும் அந்த இளம் பெண் மற்றும் அவருடைய பெற்றோர் நெகிழ்ச்சி அடைந்து அவருக்கு நன்றி தெரிவித்தனர். இதனை அடுத்து பிசியோதெரபிக்கு 45 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு இளம் பெண்ணுக்கு வாழ்த்து கூறியதோடு அவர்களுடைய பெற்றோர்களிடம் ஆசி பெற்று திரும்பி உள்ளார்.
இது குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில், வாழும் கடவுள் என்றும், நீ மட்டும் அம்பானியாக இருந்தால் இந்தியாவில் கஷ்டப்படுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், கடவுள் நேரடியாக உதவி செய்வதற்கு பதிலாக உன் மூலம் உதவி செய்கிறார் என்றும் பல கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.