ராயன் வெற்றியைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு விருந்தளித்த நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இப்படம், உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடியைத் தாண்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவே, நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே பெரிய வசூலைப் பெற்றிருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் 50-வது படம் எந்த நடிகருக்கும் சரியாக அமையாது என்கிற எண்ணம் உண்டு. இதை, நடிகர் அஜித்குமார் மங்காத்தா படத்திலும் விஜய் சேதுபதி மகாராஜா படத்திலும் முறியடித்தனர். தற்போது, தனுஷும் 50-வது படத்தில் வெற்றி பெற்றிருப்பது அவருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் ராயன் வெற்றிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு பிரியாணி விருந்தளித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.