நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது எனக்கும் சந்தோசம் தான் - நடிகர் ஜெயம்ரவி..!
கடுமையான நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கேப்டனின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது உடலுக்கும் பொதுமக்கள் திரையுலகினர் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அடுத்த நாள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பின் ரசிகர்கள் மற்றும் தேமுதிகவின் தொண்டர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளும் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ், புகழ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய நிலையில் நடிகர் ஜெயம் ரவி மனமுருக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது :விஜயகாந்த் மாதிரி வரணும்னு என் அப்பா சொல்லுவாங்க அவங்க மாறி யாராலயும் வர முடியாது.
நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது எனக்கும் சந்தோசம் தான்; அதுதான் நியாயமான ஒன்று . இதுகுறித்து நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நடிகர்கள் சேர்ந்து பேசி அதைப் பற்றிய முடிவு விரைவில் எடுக்கப்படும் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.