விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் ஜீவா!
‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தளபதி விஜய்யின் 68வது படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அந்த நிறுவனத்திற்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஜீவாவிடம் ரசிகர் ஒருவர் தளபதி 68 அப்டேட் கேட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த நடிகர் ஜீவா, விரைவில் தளபதி 68 அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.