நடிகர் மனோபாலா காலமானார்- சோகத்தில் தமிழ்த் திரையுலகம்..!!

பிரபல இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

 
manobala

தமிழ் பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலாவுக்கு கடந்த இரண்டு வாரங்களாக கல்லீரல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார். 

தமிழ் சினிமாவில் 1979-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் துணைநிலை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் மனோபாலா. அதையடுத்து பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றத் துவங்கினார். 

பிறகு பாரதிராஜாவிடம் இருந்து பிரிந்து பாக்கியராஜ் தனியாக படங்களை இயக்க துவங்கினார். அப்போது அவரிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்தார் மனோபாலா. சினிமாவில் உதவி இயக்குநராக இருந்துகொண்டே 

நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக், கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற படங்களிலும் நடித்தார். கடந்த 1982-ம் ஆண்டில் வெளியான ஆகாய கங்கை என்கிற படம் மூலம் இயக்குநராக மனோபாலா கால்பதித்தார். தொடர்ந்து பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் போன்ற 20-க்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். இதுதவிர சில தொலைக்காட்சி தொடர்களையும் அவர் இயக்கியும் நடித்தும் உள்ளார்.

தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை  கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். எனினும் கடந்த 15 நாட்களாக அவருக்கு மறுபடியும் கல்லீரல் பிரச்னை இருந்துள்ளது. இதற்காக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தபோது, இன்று உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகத்தினரையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு நடிகர்கள், திரையுலக கலைஞர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From Around the web