கேப்டன் குறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்ட நடிகர் மன்சூர் அலிகான்..!

 
1

ஆக்ஷன் படங்கள் என்றதும், முதலில் நினைவுக்கு வரும் நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவருக்கு இணையான வில்லனாக பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மன்சூர் அலிகான். கடந்த இரு வாரத்திற்கு முன்பு, சளி பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு… தற்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு நுரையீரல் சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள்.

மேலும் கேப்டனுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் அரசு சார்பில் வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது. இவர் விரைவில் நலம் பெற வேண்டி… ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், மற்றும் பிரபலங்கள் பலர் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், மன்சூர் அலிகான்… உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில்… “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?

மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி … உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குளர் நிறைய. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய் ! மகராசி அம்மாவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானாய் ! மகராசியை மரணிக்கச் செய்துவிட்டனர்.

எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு !! கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா …100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை: தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே…வாழிய வாழிய நூறாண்டு ‘!! தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூரலிகான்! என கண்ணீருடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

From Around the web