கண்ணீருடன் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட வீடியோ..!

 
1

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு வேலூர் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் தோல்வியை தழுவினார். இந்நிலையில் தான் மன்சூர் அலிகான் தற்போது கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் உருக்கமாக பேசும் நிலையில் கடைசியில் கையெடுத்து கும்பிட்டு அழுகிறார்.

இந்த வீடியோவில் மன்சூர் அலிகான் பேசியதாவது:-

வயநாடு.. ஜாதி, மதம் இனம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், சீக்கியன், பவுத்தன், கீழ் ஜாதி, மேல் ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், சினிமா, அரசியல், ஆட்சியாளர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், கல்யாணங்கள், பந்தா, பகட்டு தனம் என எதுவுமே இல்லை. இயற்கை.. இயற்கையே யாவும்.. இயற்கையே யாவும்..

கணப்பொழுதில், நொடிப்பொழுதில் உடல்கள் அடித்து செல்லப்பட்டு கட்டங்கள், ஊர்கள் கிராமங்கள் மாயமாகி உள்ளன. குடும்பம் குடும்பமாக மண்ணோடு மண்ணாக புதைந்து அவல நிலையில் வயநாடு மாறி உள்ளது. இன்னொரு புறம் ராக்கெட், ஏவுகணை குண்டுகள் வீசி கட்டடங்கள், நகரங்கள், ஊர்களை அழித்து ஒழித்து நாசமாக்கும் மனித பிண்டங்கள் ஆட்சியாளர்கள். மனிதம்.. மனிதம் கேள்விக்குறியில் இருக்கிறது. இயற்கையே யாவும். உயிரிழந்த வயநாடு மாமனிதர்களுக்கு என் நெஞ்சார்ந்த ஆழ்ந்த இரங்கல்கள் எனக்கூறி கண்ணீர் வடித்தார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நடிகர், நடிகைகள் தொடர்ந்து நிதி உதவிகள் செய்து வருகின்றனர். அதாவது கேரளாவில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிரமாங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை பெய்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன.மலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு என்பது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்களை மொத்தம் அழித்தது.

பொதுமக்கள், வீடுகளோடு சாலியார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். மொத்தம் 1000க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை என்பது 344 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200க்கும் அதிகமானவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் தான் மன்சூர் அலிகான் இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

From Around the web