இன்று நடிகர் பாண்டுவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள்..!
தமிழில் 1970ல் வெளியான 'மாணவன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பாண்டு.அதன் பிறகு, 'பணக்காரன்', 'சின்ன தம்பி', 'ரிக்ஷா மாமா', கில்லி', 'போக்கிரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரது வசன உச்சரிப்பும், நடிப்பும் தனித்தன்மை வாய்ந்தது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'இந்த நிலை மாறும்'. இவரது சகோதரர் 'இடிச்சபுளி' செல்வராஜும் நகைச்சுவை நடிகர். தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை கடைப்பிடித்த பாண்டு, சிறந்த ஓவியரும் கூட. இவரது சகோதரர் 'இடிச்சபுளி' செல்வராஜ் எம்.ஜி.ஆரிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவர் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானார் பாண்டு. அதன் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த 'குமரிக்கோட்டம்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களில் ஓவியங்கள் வரைந்து கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். அதிமுக கட்சி தொடங்கியபோது, ஓவியராக அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர் பாண்டுதான். எம்.ஜி.ஆர். கேட்டு கொண்டதற்கு இணங்க ஒரு மணி நேரத்திலேயே இரவில் கொடியை வடிவமைத்துள்ளார். அதேபோல, அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை வரைந்தவரும் இவர்தான்.
அதேபோல, சன் தொலைக்காட்சியின் சின்னம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சின்னங்களை பல நிறுவனங்களுக்கு வடிவமைத்து கொடுத்திருக்கிறார். ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட பாண்டு, இந்த சின்னங்கள் வடிவமைப்பதை அதிகாலை 4-4.30 மணிக்கு மட்டுமே செய்வதை தனது வழக்கமாக கொண்டுள்ளார்.
கேப்பிடல் லெட்டர்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த நடிகர் பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தோற்றால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.இன்று நடிகர் பாண்டுவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள்.