தாயார் பெயரில் கல்வி அறக்கட்டளையை தொடங்கிய பிரபல நடிகர்..!

 
1

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் உதயா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது சகோதரர் ஏ.எல்.விஜய் இயக்குநராக உள்ளார்.

உதயா, 1998ஆம் ஆண்டு தனது தந்தை தயாரித்த இனி எலாம் சுகமே படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நுழைந்தார்.இரண்டாவது ஹீரோ, காமெடியன், குணசித்ர நடிகர் என்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த உதயா 10க்கும் மேற்பட்ட பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவரது பிறந்த நாள் ஆகும். தனது பிறந்த நாளில் அறக்கட்டளை ஒன்று தொடங்குவதாக நடிகர் உதயா அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கை வருமாறு.

உங்களின் வாழ்த்துகளுடன் எனது பிறந்தநாளான இன்று கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்குவது குறித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் மறைந்த எனது தாயார் நினைவாக இந்த தொண்டு அமைப்பை நான் தொடங்கியுள்ளேன்.

தகுதியுள்ள ஏழை குழந்தைகள் அவர்கள் விரும்பும் கல்வியை தடையின்றி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை உருவாக்கி உள்ளோம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த போதும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை அணுகியவர்களுக்கும் எனக்கு தெரிந்த கல்வி நிறுவனங்கள் மூலமாக பல குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன்.

இப்போது அதை எனது தாயார் பெயரில் நிறுவியுள்ள வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை மூலம் தொடர உள்ளேன். கல்வி என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதுவும் மாணவர்கள் அவர்கள் ஆசைப்பட்ட கல்வியை கற்க வேண்டும்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருந்தும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள காரணத்தால் கல்வியை தொடர்ந்து கற்க முடியாத மாணவர்கள் முறையான கல்வியை தொடர்ந்து கற்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம்.

இவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் கல்விக்கு தேவையான உதவிகளை எங்கள் குழு வழங்கும். இத்தகைய அறக்கட்டளைகள் ஏற்கனவே நிறைய உள்ள போதும் உதவி தேவைப்படும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.

அதே சமயம், கல்வி நிறுவனங்களும் எத்தனையோ மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றன.

எனவே இந்த அறக்கட்டளை மூலம் எங்களுக்கு நன்கு அறிமுகமான கல்வி நிறுவனங்கள் மூலமும் இதர பல கல்வி நிறுவனங்கள் வாயிலாகவும் தேவை உள்ள மாணவர்களுக்கு கட்டாயம் உதவி செய்வோம்.

எனது பிறந்தநாளான இன்று எங்கள் தாயார் பெயரில் இந்த அறக்கட்டளையை தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அறக்கட்டளை மூலம், கல்வி நிறுவனங்களின் வேந்தர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆதரவோடு, உங்கள் அனைவரின் ஆசியோடு இந்த புதிய பயணத்தை தொடங்குகிறோம்.

அறக்கட்டளை தொடர்பான தகவல்களுக்கு வி. பாலமுருகன் (9841193196) மற்றும் ஆர்.எஸ். சுதாகர் (9551538810) ஆகியோரை அணுகலாம். மின்னஞ்சல்: vaet11educationaltrust@gmail.com

இவ்வாறு அறிக்கையில் நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.


 

From Around the web