விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் காலை வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருபக்கம் மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்க மறுபக்கம் ஒவ்வொருவராக உயிரிழந்து வந்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச்சாராயதை குடித்ததன் விளைவே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து மருத்துவமனைகளில் அழுகுரல்கள் விடாமல் கேட்க தொடங்க அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சிக்கு படையெடுத்து வருகின்றனர் . தமிழகத்தை உலுக்கிய இந்த கோர சம்பவத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 நிவாரணமும் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது .