குடியிருப்பு கட்டடம் ஒன்றிற்கு நடிகர் விஜய் சேதுபதி பெயர் - ஃபெப்சி முடிவு!

 
1

தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது;

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிலம் கொடுக்கப்பட்டு, மூன்று வருடங்களுக்குள் அங்கு வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற அரசாணை அப்போது வெளியானது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம், நிர்வாக மாற்றம் போன்ற காரணங்களால் குடியிருப்புகள் கட்ட இயலவில்லை.

என்னுடைய தலைமையில் இந்த பெப்சி நிர்வாகம் அமைந்த பின் குடியிருப்புகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் அந்த நிலத்தை குடியிருப்புகளுக்கு பயன் படுத்திக் கொள்ள அரசாணை பிறப்பித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

அதிகாரிகள், அமைச்சசர்கள் என அனைவரும் கலந்தாலோசித்த பிறகு அரசாணை வழங்குவதாக சொன்னார்கள். இந்நிலையில், அதற்கான அரசாணை நேற்று (பிப்.21) எங்களுக்கு வந்துள்ளது. அதில், மூன்று வருடங்களுக்குள் வீடு கட்ட தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், வீடற்ற எங்களுடைய தொழிலாளர்கள் ஒரே இடத்தில் ஒரே குடியிருப்புகளில் வசிக்க சம்மேளனம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும். முதலில் 1,000 வீடுகள் கட்ட ஏற்பாடு செய்யப்படும். பெப்சிக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் புரிதல் இல்லாமல் சில குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்று தனியாக பிரிந்து அதிலும் 300 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதனால் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒத்துழையாமை வழங்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டோம். அதே போன்று தனிமனித ஒத்துழையாமை வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஓரிரு வாரங்களில் அனைவரும் கலந்து பேசி தயாரிப்பாளர் சங்கம், பெப்சி இடையே உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும். குடியிருப்புகள் கட்ட பணம் தேவை படுகிறது. வீடு தேவைப்படுவோர் 2.5 லட்சம் கட்ட வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது.

விஜய் சேதுபதி டவர்

இந்த காரணத்தினால் பணம் கட்ட இயலாத தொழிலாளர்களுக்காக பிரபலங்கள் பலரிடம் வேண்டுகோள் வைத்தோம். அதில் நடிகர் விஜய் சேதுபதி 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பணம் நன்கொடையாக வழங்கினார். ஒரு தொழிலாளருக்கு 50 ஆயிரம் வீதம் 250 தொழிலாளர்களுக்கு இந்த பணத்தை வழங்கியுள்ளார்.

அதனால் இந்த நிலத்தில் கட்டப் போகும் 6 டவர்களில் ஒரு டவருக்கு விஜய் சேதுபதி டவர் என்று பெயர் சூட்ட உள்ளோம். பணம் உள்ள பிரபலங்கள் உங்கள் தோளோடு தோள் நின்று 50 வருட காலமாக உழைத்த தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

தயாரிப்பாளர்கள் செலவுகளை குறைப்பதற்காக பெப்சி தொழிலாளர்கள் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ. 2,000 கொடுக்கப்பட்ட பேட்டா பணம் ரூ.1,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் தான் தங்களுடைய சம்பளம் குறைப்பது தொடர்பாக பேச வேண்டும். நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும், நடிகர் விஜய் சேதுபதிக்கும் மிகப் பெரிய நன்றியை பெப்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

From Around the web