நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் மாயம்- சூரி வீட்டு திருடனிடம் விசாரணை..!

 
நடிகர் விமல்

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தனது விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டுவிட்டதாக நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விமல் கடந்த 12-ம் தேதி சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த ரசிகர்கள் பலர் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியுள்ளனர்.

அதற்கு அவரும் அனுமதி அளித்ததை தொடர்ந்து ரசிகர்கள் விமலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்டனர். திருமண நிகழ்ச்சிக்குள் சென்ற போது அவருடைய போன் திருடு போனது தெரிய வந்தது. மூன்று நாட்கள் தேடி பார்த்தும் அவருக்கு போன் கிடைக்கவில்லை.

இதனால் அவர் சென்னை காவல் ஆணையரிடம் போன் தொலைந்தது குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து நடிகர் விமலின் புகார் கானாத்தூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தங்களுடைய விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் இல்ல திருமண விழாவில் 10 பவுன் மதிப்பிலான தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை மதுரை காவல்துறை கைது செய்தது.

இந்த சம்பவம் நடைபெற்றதுக்கு முன்னதாக இதே விக்னேஷ் நடிகர் விமல் வந்திருந்த திருமண நிகழ்வில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக சூரியின் வீட்டில் கை வரிசையை காட்டியது போல, நடிகர் விமலுடைய செல்போனையும் இவர் திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

From Around the web