படப்பிடிப்பில் விபத்து- காயங்களுடன் மீட்கப்பட்ட நடிகர் விஷால்..!

 
விஷால்

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷால் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது சினிமா துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷால், ஆர்யா இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர். இதற்கான ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த பிறகு, புதுமுக இயக்குநர் து.ப. சரவணனின் படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் நடந்து வருகிறது.


நேற்று விஷால் மற்றும் நடிகர் பாபு ராஜுக்கு இடையேயான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட விபத்தில் விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடிபட்டு மயங்கி விழுந்த விஷாலை படக்குழு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷாலுக்கு முறையான பிஸியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் யோகி பாபு, மலையாள நடிகர் பாபு ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், நடிகர் விஷால் தன்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃப்லிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இன்னும் படத்திற்கு பெயரிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web