நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவு..! 

 
1
கல்லூரி படிப்பை முடித்தவுடன் கிரிக்கெட் வீரராகவே விரும்பினார் நடிகர் விஷ்ணு விஷால்..முக்கியமான போட்டிகளில் விளையாடிவந்த விஷ்ணு விஷாலுக்கு காலில் ஏற்பட்ட காயம் அவரது வாழ்க்கையை மாற்றியது. தன்னுடைய மாமா மூலம் திரையுலகில் நுழைந்த விஷ்ணு விஷால் தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் அவருக்கு தமிழில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தது.

இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருதை வென்றார் விஷ்ணு விஷால். தொடர்ந்து முண்டாசுப்பட்டி உள்ளிட்ட சில படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்திய விஷ்ணு விஷாலுக்கு ஜீவா படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. இந்தப் படத்தில் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்து நடித்திருந்தார் விஷ்ணு விஷால். தொடாந்து ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் விஷ்ணு விஷால் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றன. ராட்சசன் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்துவரும் விஷ்ணு விஷால் தற்போது ரஜினிகாந்துடன் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது மனதிற்கு பிடித்தமான கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட ஜீவா படத்தில் நடித்திருந்த விஷ்ணு விஷால், இந்தப்படத்திலும் அந்தக் கதைக்களத்திலேயே நடித்துள்ளார். முன்னதாக ஜீவா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், லால் சலாம் படமும் வெற்றிப்பட பட்டியலில் இணையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக சமூகவலைதளம் மூலம் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இறுதியாக இறுதியாக மற்றும் இறுதியாக தான் கிரிக்கெட் கடவுளை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்தமான கிரிக்கெட்டராக எப்போதும் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை தான் சந்தித்து பேசியதாகவும் இதன்மூலம் தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரே ஒரு கிரிக்கெட் கடவுளை சந்தித்து பேசியது தன்னுடைய மனதை மிகவும் மயக்குவதாக அமைந்ததாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.


 

From Around the web