நடிகர் சங்க தேர்தலில் தோல்வி.. விருந்தினராகவே இருந்து படங்களில் நடிப்பேன்.. பிரகாஷ் ராஜ் உருக்கம்!

 
1

தெலுங்கு சினிமாவின் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டார்.

சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்களின் ஆதரவு பிரகாஷ் ராஜூக்கு இருந்தது. இதனால் பிரகாஷ் ராஜ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது.

மொத்தம் உள்ள 900 உறுப்பினர்கள் உள்ள தெலுங்கு நடிகர் சங்கத்தில் 833 பேருக்குத்தான் ஓட்டுப் போடும் உரிமை இருந்தது. அவர்களில் 655 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

இதில் நடிகர் விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் 274 ஓட்டுக்களும் கிடைத்தன. இதன்மூலம் 113 ஓட்டு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார்.

ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ், “விஷ்ணு வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள். பிராந்தியவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவை எம்ஏஏ உறுப்பினர்கள் என்னை தலைவராக தேர்வு செய்யாததற்கான காரணம். நான் என்ன செய்ய முடியும்? என் பெற்றோர் தெலுங்கு இல்லை. நான் தொடர்ந்து இங்கு விருந்தினர்தான்.

விருந்தினராகவே இருந்து தெலுங்கு படங்களில் நடிப்பேன் என்றார். மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுடனான எனது உறவு அப்படியே இருக்கும். நான் இந்த முடிவை மதிக்கிறேன் மற்றும் விஷ்ணுவின் பதவிக்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

From Around the web