சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில்...சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

 
1

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த,திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா, பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் ஒரு நட்சத்திர விடுதியில் அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் (இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது) மீது புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. அப்போது நீதிபதி ரேவதி கூறுகையில், சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீஸார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஹேம்நாத்தை விடுதலை செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்துதான் சித்ராவின் தந்தை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

From Around the web