இனி ’மகாநதி’ சீரியலில் நடிகை திவ்யா நடிக்க மாட்டாராம்.. அவரே சொன்ன காரணம்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மகாநதி’ சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது தான் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் முதலில் நடிகை பார்த்திபா நாயகியாக நடித்து வந்த நிலையில் அவர் திடீரென திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் இந்த தொடரில் இருந்து விலகினார். அதன் பிறகு இந்த தொடரின் நாயகியாக திவ்யா நடித்து வந்த நிலையில் தற்போது அவர் தனக்கு உடல்நிலை குறைவு காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள திவ்யா, இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் ’மகாநதி’ படப்பிடிப்பிற்கு செல்ல முடியவில்லை.
இதனால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்னுடைய உடல்நல குறைவு காரணமாக நான் நடித்த கேரக்டரில் வேறு நபரை தேட வேண்டிய நிலை ’மகாநதி’ குழுவுக்கு ஏற்பட்டுள்ளது..
மகாநதியின் கங்கா கேரக்டரில் தொடர்ந்து நடிக்க முடியாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கங்கா கேரக்டருக்கு இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி. மீண்டும் உங்களை உடல் நலம் தேறியவுடன் சந்திப்பேன் என்று நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி விரைவில் குணமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.