500 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மாரடைப்பால் மரணம்..!

தமிழ் சினிமாவில் மொத்தம் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், ஆரம்பக்கால கட்டத்தில் குரூப் டான்சராக வாழ்க்கையை துவங்கினார். பிறகு மெல்ல மெல்ல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி பிரபலமானார்.
காதல் படுத்தும் பாடு, குழந்தை உள்ளம், நிறம் மாறாத பூக்கள், திருடன், ஒருத்தி மட்டும் கரையினிலே என பல்வேறு படங்களில் நடித்து கவனமீர்த்தார். குறிப்பாக பதினாறு வயதினிலே படத்தில் காந்திமதியோடு இவர் சண்டை போடும் காட்சி மக்களிடையே மிகவும் பேசப்பட்டது.
பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான சின்ன வீடு படத்தில் நகைச்சுவை மற்றும் வில்லி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர் நீச்சல் மற்றும் வேலைக்காரன் போன்ற படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை குரோம்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த ஜெமினி ராஜேஸ்வரிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
நடிகை ஜெமினி ராஜேஸ்வரிக்கு தட்சிணாமூர்த்தி, செல்வராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவருடைய மறைவுக்கு திரையுலகத்தினர் பலர் இரங்கல் கூறி வருகின்றனர்.