7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை..!!

 
1

பாய் பிரண்ட் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனிரோஸ். இவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிங்கம்புலி, மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். கடைசியாக 2014ம் ஆண்டு காத்தவராயன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையான இதில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாகவும், ஹனிரோஸ் பத்திரிகை நிருபராகவும், ஜெய் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜெய் வில்லனாக நடிக்கிறார்.

சுந்தர்.சி.யின் உதவியாளராக இருந்து இயக்குநராக மாறிய பத்ரி, ‘ஐந்தாம் படை’, ‘வீராப்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். மீண்டும் சுந்தர்.சியை வைத்து தற்போது இயக்கி வரும் படம் ‘பட்டாம்பூச்சி’. 

இப்படம் குறித்து இயக்குநர் பத்ரி கூறியுள்ளதாவது,

“அமைதியான வாழ்க்கை வாழ நினைக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும், தொடர்ந்து பல கொலைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சைக்கோ கொலைகாரனுக்கும் இடையில் நடக்கும் பூனை - எலி ஆட்டமே இந்தப் படத்தின் கதை.

போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி.யும், சைக்கோ கொலைகாரனாக ஜெய்யும் நடிக்கிறார்கள். சுந்தர்.சி.யின் ஆறடி உயரமும் அவரது ஆஜானுபாகுவான தோற்றமுமே அவரை போலீஸ்காரர் என்று நம்பும்படி இருக்கும். அதனடிப்படையில் அவர் இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.

அதே நேரம் பார்ப்பதற்குக் கொலைகாரனாக தெரியாத, அழகான ஒரு ஆள் படத்தில் வில்லன் பாத்திரத்துக்குத் தேவைப்பட்டது. முதலில் வில்லனாக நடிக்க மறுத்த ஜெய், சுந்தர்.சி. மீது கொண்ட மரியாதையின் காரணமாக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web