தி ஃபேமிலி மேன் தொடரில் ஏன் நடித்தேன்- நடிகை சமந்தா விளக்கம்..!

 
சமந்தா

தி ஃபேமிலி மேன் தொடரில் நடித்தது குறித்தும், அந்த சீரியலில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மீதான புரிதல் குறித்து நடிகை சமந்தா சமூகவலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 சீரியல் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் தமிழுணர்வாளர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களையும், தமிழர்கள் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது, அதனால் இதனுடைய ஒளிப்பரப்பை நிறுத்த வேண்டும் என மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சீரியலில் சர்ச்சைக்குரிய போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தா முதன்முறையாக தன்னுடைய புரிதல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த தொடரில் நடிப்பதற்காக இயக்குநர்கள் கதை சொல்ல வந்தனர். அதை தொடர்ந்து இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களை பார்க்க நேர்ந்தது. அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அதை தொடர்ந்து தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடிக்க முடிவு செய்தேன்.

அந்த தொடரில் ராஜி என்கிற போராளி கதாபாத்திரத்தில் நடித்தேன். மிகவும் கவனமாக கையாளப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த அந்த கதாபாத்திரத்தில் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு நடித்தேன். ராஜி கதாபாத்திரத்திம் மூலம் ஈழத்தில் நடந்த துயரங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய காட்சிகளும் இந்த தொடரில் காண்பிக்கப்பட்டுள்ளன. 

மற்றவர்களை புண்படுத்துவது யாருடைய நோக்கமும் கிடையாது. தொடரில் கதை மற்றும் காட்சிகள் கற்பனையானது தான். இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்கள் நிகழ்த்திய போரில் மரணம் அடைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திட வேண்டும். அதை இந்த தொடர் நிறைவு செய்யும் என சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். 
 

From Around the web