நடிகை சமந்தா பாட்காஸ்ட் மூலம் ரசிகர்களை தவறாக வழி நடத்துவதாக புகார்..! நடந்தது என்ன ?
 

 

தமிழ் சினிமாவில் ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இவர் மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக அவருக்கு உடல்நலம் தேறி வந்த நிலையில், மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின.

Samantha

இதனை தொடர்ந்து, மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மயோசிடிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். இதன் மூலம், மயோசிடிஸ் நோய் குறித்து நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என்று மயோசிடிஸ் இந்தியா தெரிவித்திருந்தது. தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகை சமந்தா பாட்காஸ்ட் மூலம் உடல் நலம் குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷ் ஷரோத்ரியுடன் இணைந்து அளித்து வருகிறார். சமீபத்தில் கல்லீரல் நச்சுகளைச் சுத்தப்படுத்துவது பற்றி அவருடன் கலந்துரையாடினார்.

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டேன்டேலியன் என்ற மூலிகை சிறந்தது என்று இவர்கள் கூறிய கருத்துக்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் தனது எக்ஸ் தளத்தில், கல்லீரல் நச்சுகளைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக, தனது ரசிகர்களை சமந்தா தவறாக வழிநடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.



அவர் மேலும் கூறும்போது, “அறிவியல் பற்றிய அறியாத இருவர், தங்கள் அறியாமையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த மூலிகையாக டேன்டேலியன் மலர் இருப்பதாக சமந்தாவுடன் உரையாடும் நபர் கூறுகிறார். நான் ஒரு கல்லீரல் மருத்துவர். டேன்டேலியனை சாலட்டில் பயன்படுத்தலாம். சிறுநீர் வெளியீட்டை அதிகரிக்கலாம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின்படி ‘டையூரிடிக்’ அல்லது ‘தண்ணீர் மாத்திரை’ போல வேலை செய்யலாம்.

ஆனால் இந்த விளைவுகளுக்குச் சான்றுகளும் இல்லை. சான்றுகள் அடிப்படையில் டேன்டேலியன், உணவு வயிற்றில் இருந்து வெளியேறி சிறுகுடலுக்குள் நுழையும் விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை எளிதாக்க முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர் அமைப்புகளில் வளர்க்கப்படும் டேன்டேலியன்களில் பூச்சிக்கொல்லிகள் ஆபத்து காரணமாக, காட்டு டேன்டேலியன்களை உட்கொள்வது பரிந்துரைக்கப் படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web