கோப்பை வென்ற மகன்கள்... நெகிழ்சியோடு பதிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கள் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக இருவரும் கடந்தாண்டு அறிவித்தனர். இருவரும் விவாகரத்து பெறவில்லை என்றாலும் ஒருமித்த கருத்துடன் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில், யாத்ரா மற்றும் லிங்காவின் பள்ளி விழா, விளையாட்டு விழா போன்ற நிகழ்வுகளில் தாய் ஐஸ்வர்யாதான் பெரும்பாலும் கலந்து கொள்வார். கடந்தாண்டு யாத்ரா அவரது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான விழா சென்னையில் அவரது பள்ளியில் நடைபெற்றது.
இந்த விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இணைந்து கலந்துகொண்டனர். பிரிவை அறிவித்த பின்னர் இருவரும் தங்களது மகனோடு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், சமீபத்தில் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரின் பள்ளி ஸ்பேர்ட்ஸ் டே விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்று தனது மகன்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தியுள்ளார். ஸ்போர்ட்ஸ் டேவில் நடைபெற்ற தொடர் ஓட்டப்பந்தயமான ரிலேவில் மூத்த மகன் யாத்ரா முதலிடம் பிடித்து கோப்பை வென்றுள்ளார். இந்த போட்டி நிகழ்வுகளின் புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “சூரியன் எவ்வளவு சுட்டெரித்தாலும் இந்த குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை தடுத்து நிறுத்த முடியாது... காலை சூரிய ஒளியில் ஓடி அவர்கள் ஒளிர்கிறார்கள். அங்கிருந்த எனது மகன்களை பார்த்து மகிழ்ந்து பிரகாசிக்கிறேன்” என்று வாசகங்களை கேப்சனாக வைத்துள்ளார்.