மூன்றாவது முறையாக இணையும் அஜித் - வினோத் கூட்டணி; போனி கபூர் உறுதி

 
1

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் ‘வலிமை’. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் போனி கபூர்தான் தயாரிப்பார் என்றும், ஹெச்.வினோத்தே இயக்குவார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. மேலும், இதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை பல மாதங்களுக்கு முன்னரே முடிந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் போனி கபூர் இதை உறுதி செய்துள்ளார்.

“ஹெச் வினோத் மீது நம்பிக்கை வரக் காரணம் அவர் செய்யும் பணிதான். அவர் பேசமாட்டார். அவர் வேலையே அவரைப் பற்றிச் சொல்லிவிடும். தன்னைத் தன் படங்கள் மூலமே அவர் வெளிப்படுத்துகிறார். சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் சில கதைகளைச் சொல்ல வினோத்தை அஜித் மும்பைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது என் மனைவி (மறைந்த நடிகை ஸ்ரீதேவி) வினோத்தோடு தமிழில் உரையாடினார். வினோத் கூறிய கதைகள் அவரை அதிகம் ஈர்த்தன. வினோத் தெளிவாக இருந்தார். அதனால்தான் எங்கள் பயணம் மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. ஏன் எனது அடுத்த படம் கூட அஜித் - வினோத் கூட்டணியோடு தான்” என்று பேசியுள்ளார்.

மூன்றாவது முறையாக போனி கபூர், அஜித் மற்றும் வினோத் கூட்டணி இணையவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web