கொரோனா தடுப்பு பணிக்காக அஜித், உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிதியுதவி..!

 
கொரோனா தடுப்பு பணிக்காக அஜித், உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிதியுதவி..!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அதேபோல நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு 31 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. மேலும் தினசரி கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 300-யை நெருங்கி வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

அனைவருக்கும் கொரோனோ தடுப்பூசி உள்ளிட்ட  கொரோனா தடுப்பு பணிகளுக்கு மாநில அரசு நிதியுதவி கோரியுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலினின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதை தொடர்ந்து முதல் நபராக நடிகர் சூர்யா குடும்பத்தினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ரூ. 1 கோடி நிதியுதவி அளித்தனர். அதை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்தார்.

மேலும் பலரிடம் இருந்து நிதியுதவி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித் தற்போது ரூ. 25 லட்சம் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கியுள்ளார். முன்னதாக அவர் ரூ. 2.5 கோடி நிதியுதவி அளித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளதாக அவருடைய செய்தித் தொடர்பாளர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதேபோல் ‘தமிழ் படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதனும், ரூ.50 ஆயிரத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கி உள்ளார்.
 

From Around the web