விரைவில் ஒடிடி-யில் வெளியாகிறது அஜித்தின் விடாமுயற்சி..!

'விடாமுயற்சி' ஓடிடி ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
'துணிவு' ரிலீசுக்கு பின்பாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்தார் அஜித். ஒரு சில காரணங்களால் விக்கி இப்படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' துவங்கப்பட்டது. இந்தப்படத்தின் ஷுட்டிங் அஜர்பைஜான் நாட்டில் மும்முரமாக நடந்து வந்தது. நீண்ட காலமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இப்படத்தின் ரிலீசுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் கடந்த பொங்கலுக்கே 'விடாமுயற்சி' ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது 'விடாமுயற்சி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியானது.
அஜித், திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரியளவில் பில்டப் காட்சிகள் எதுவும் இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் வெளியானது 'விடாமுயற்சி'. இதுவே படத்திற்கு நெகட்டிவாகவும் அமைந்தது. ஏகேவின் மாஸ் காட்சிகளை எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கலவையான விமர்சனங்களையே 'விடாமுயற்சி' பெற்றது.பாக்ஸ் ஆபீஸில் இப்படம் ரூ. 140 கோடி அளவில் மட்டுமே வசூலித்தது. இந்நிலையில் 'விடாமுயற்சி' ஓடிடி ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் முதல் வாரத்தில் 'விடாமுயற்சி' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏகே ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.