அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக மாமா பவன் கல்யாண்..?

 
1

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது அல்லு அர்ஜுன் அங்கு நேரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் கைதும் செய்தனர். இருப்பினும், ஹைகோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியதால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த விவகாரத்தில் தெலுங்கு திரையுலகில் பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்துள்ளனர். இதற்கிடையே ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக அவர் தெலுங்கானா போலீசாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சந்தியா தியேட்டர் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீதான நடவடிக்கைக்குத் தெலுங்கானா போலீசாரை குற்றஞ்சாட்ட முடியாது எனச் சொன்ன ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மனதில் வைத்தே போலீசார் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

பாஜக கூட்டணியில் இருந்தாலும் கூட ரேவந்த் ரெட்டியை மிகச் சிறந்த தலைவர் எனப் பாராட்டிய பவன் கல்யாண், கூட்ட நெரிசலில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அல்லு அர்ஜுன் முன்பே நேரில் சென்று சந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

ஆந்திராவில் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த பவன் கல்யாண், "மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதே போலீசார் கடமை.. மேலும், இங்கே சட்டம் என்பது அனைவருக்கும் சமம். இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பைத் தான் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அதேபோல அங்கு என்ன சூழல் நிலவியது என்பதை தியேட்டர் ஊழியர்கள் அல்லு அர்ஜுனுக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அவர் வந்த பிறகு நிலைமையைச் சமாளிப்பது கடினம்.

மேலும், கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை அல்லு அர்ஜுன் முன்கூட்டியே நேரில் சென்று சந்தித்திருக்க வேண்டும். அப்படி அவர் சந்தித்து இருந்தால் நிலைமையைச் சற்று அமைதிப்படுத்தியிருக்கலாம்" என்றார். அல்லு அர்ஜுனும் ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாணும் உறவினர்கள் ஆவர். அதாவது அல்லு அர்ஜுனின் அத்தை சுரேகாவை தான் பவன் கல்யாணின் மூத்த சகோதரரான நடிகர் சிரஞ்சீவி திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாண் மேலும் பேசுகையில், "எனது மூத்த சகோதரர் சிரஞ்சீவி கூட அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் போது தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் ரசிகராக அமர்ந்து படம் பார்க்க விரும்புவார். ஆனால் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அவக் எப்போதும் தியேட்டருக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்தே செல்வார்" என்றார்.

 

தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்துப் பேசிய பவன் கல்யாண், "ரேவந்த் ரெட்டி ஒரு சிறந்த தலைவர். அவர் அடி மட்டத்தில் இருந்து மேலே வந்தவர். அவர் ஒன்றும் ஜெகன்மோகன் போல இல்லை. அவர் தெலுங்கு சினிமா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே சிறப்புக் காட்சிகளுக்கும் டிக்கெட் விலையை ஏற்றவும் அனுமதித்தார். அதேநேரம் இந்த குறிப்பிட்ட அல்லு அர்ஜுன் விவகாரத்தில் திரைமறைவில் எதாவது நடந்ததா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

 

From Around the web