தமிழ் படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்- வெளியான அறிவிப்பு..!!
தமிழில் நேரம், தி ஏஞ்சல், ரெக், கருப்பு மற்றும் வெள்ளை போன்ற குறும்படங்களை இயக்கி பெரியளவில் கவனமீர்த்தவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் குறும்படமாக இயக்கிய நேரம் படத்தின் கதையை, அதேபெயரில் முழு நீள படமாக உருவாக்கினார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படம் ஒரே நேரத்தில் மலையாளத்திலும் உருவாக்கப்பட்டு வெளியானது. பெரியளவில் வெற்றி பெற்ற இப்படத்தை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான படம் தான் ‘பிரேமம்’. நிவின் பாலி, கிருஷ்ணா சங்கர், சபரீஷ் வர்மா, சிஜு வில்சன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் மூலம் தான் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனோ சாப்ஸ்டியன் உள்ளிட்டோர் நாயகிகளாக திரையுலகில் கால்பதித்தனர். தேசியளவில் மிகப்பெரிய அளவில் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. வெறும் ரூ. 4 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
பிரேமம் படத்துக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் 2016-ம் ஆண்டு அவியல் என்கிற பெயரில் குறும்படம் இயக்கினார். அதை தொடர்ந்து 6 ஆண்டுகள் கழித்து ப்ரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் அவர் இயக்கிய படம் ‘கோல்டு’. ரசிகர்களிடம் வரவேற்பு பெறாமல் இந்த படம் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை தமிழில் இயக்கவுள்ளார் அல்போன்ஸ். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். விரைவில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், யார் ஹீரோ உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)