அண்ணாத்த பட பாடல் வெளியீடு- எஸ்.பி.பி குறித்து ரஜினிகாந்த் உருக்கம்..!

 
அண்ணாத்த பாடல் வெளியீடு

அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள ”அண்ணாத்த மாஸூக்கே பாஸூ” என்கிற பாடல் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பாடலை பாடிய மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து ரஜினிகாந்த் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதி பாபு, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான ‘அண்ணாத்த மாஸுக்கே பாஸு” என்கிற பாடல் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

டி. இமான் இசையில், விவேகா வரிகளில் பாடலை பாடியுள்ளார் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு காலமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


அவருக்கே உரித்தான கனீர் குரலில் இந்த பாடலை எஸ்.பி.பி பாடி முடித்துள்ளார். இந்நிலையில்  ரஜினி, எஸ்பிபி எனக்கு பாடும் கடைசி பாடல் இதுதான் என நினைக்கவில்லை என ட்விட்டரில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். 

மேலும் ”பாடல் வெளியான 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என நெகிழ்ச்சியுடன் ரஜினிகாந்த் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 

From Around the web