வடசென்னையில் மிகவும் முக்கியமான நபராக வலம் வந்தவர் ஆம்ஸ்ட்ராங் : நடிகர் சாய் தீனா!

 
1

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்போது சென்னை பெரம்பூரில் உள்ள பந்தர் கார்டன் பள்ளியில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு ஆதரவாளர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் சாய் தீனா அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

எங்களின் மொத்த அதிகாரமும் போய்விட்டது. எங்கள் பூர்வகுடி மக்களின் எழுச்சி நாயகன் எங்கள் அண்ணன். இது ஒரு பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் அண்ணன் இருந்த வரைக்கும் எங்களுக்கு எல்லாமே கிடைத்தது. எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருந்தோம். தற்போது மீண்டும் ஒரு 100 ஆண்டுகள் பின்னால் போனது போல இருக்கிறது. எங்களுக்கு அப்படி ஒரு பயம் வந்துள்ளது.

முதலில் எங்களுக்கு சாதியே கிடையாது. நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். சாதி, மதம், இனம், பேதம் என எதுவுமே இல்லை. எங்களிடம் இருப்பது ஒன்றே ஒன்று தான், மனிதநேயம். நாங்கள் மனிதநேயத்துடன் வாழும் மக்கள். எங்கள் முன்பு யார் இருந்தாலும் அவர்களை மனிதாக தான் பார்ப்போம். சாதியா பார்க்க மாட்டோம். இனமா பார்க்க மாட்டோம். ரொம்ப முக்கியமான உயிராக தான் பார்ப்போம்.

எந்த ஒரு அடையாளமும் இல்லாத மக்களாக தான் வாழ ஆசைப்படுகிறோம். எங்களை பார்ப்பவர்கள் தான் சாதியாக அடையாளப்படுத்துகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் அண்ணனும் சாதியாக வாழவில்லை. மனிதாக வாழ்ந்திருக்கிறார். இங்குள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து நிற்கிற மிகப்பெரிய சக்தியை தான் இழந்து நிற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் மரணத்தை ஒட்டி நேற்று இரவு முதல் கானா இசை மூலம் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இவர் புத்த மதத்தை தழுவியவர். அம்பேத்கரின் மகாயான புத்த மத கோட்பாட்டின் படி வாழ்ந்தவர். எனவே அவரது இறுதி சடங்கும் புத்த மத கோட்பாட்டின் படி நடைபெறும் என்று தெரிகிறது.

From Around the web