ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருக்கு பிடிவாரண்ட்..!

மலேசியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஐ.ஜீ குளோபல் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தங்கள் நிறுவனத்தின் மூலமாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் திரைப்படங்களை வாங்கி வெளியிட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் வியாபார தேவைகளுக்காக தங்கள் நிறுவனத்திடம் இருந்து பல்வேறு தவணைகளில் சுமார் 26 கோடி ரூபாய் கடன் பெற்றது. இந்த கடன் தொகைக்கு விற்பனை ஒப்பந்த பத்திரம், கடன் பத்திர உத்தரவாதம் உள்ளிட்ட பத்திரங்கள் அடமானம் கொடுக்கப்பட்டது. ஆனால், கடன் தொகைக்காக தங்கள் நிறுவனத்திற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய காசோலைகள் வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்ததால், காசோலை மோசடி சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகாததால், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமசாமிக்கு எதிராக ஏற்கனவே பிறப்பித்த ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது உத்தரவை மாற்றி அமைப்பதாகவும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிப்பதாகவும் உத்தரவிட்டு தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணை அக்டோபர் 3 தேதிக்கு தள்ளி வைத்தார்.