ஒரு பக்கம் ஆர்யா, இன்னொரு பக்கம் விஷால்- மோதி பார்க்கும் ஜோதிகா..!

 
ஆர்யா, விஷால் மற்றும் ஜோதிகா
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஜோதிகா, ஆர்யா மற்றும் விஷாலுக்கு போட்டியாக களமிறங்கவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் அவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் அவர் நடித்துள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை ரா. சரவணன் இயக்கியுள்ளார். படத்தில் ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிகுமார் நடித்துள்ளார். டி. இமான் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தில்  சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சொந்தமாக தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அன்று ஆயுத பூஜை நாள் என்பதால் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி, சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன.

இதனால் விஷால் மற்றும் ஆர்யாவுக்கு போட்டியாக ஜோதிகா நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த படத்துடன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மேலும் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறது. அவை அனைத்தும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web