திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை யாருக்கு விருது கிடைத்திருந்தாலும் அது நம் நால்வரும் பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும் : நித்யாமேனன்..!
திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு அவருக்கு வாழ்த்துகள் ஒரு பக்கம் குவிந்தாலும், இன்னொரு பக்கம் இது குறித்து விமர்சனங்ளும் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நித்யாமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியுள்ளதாவது:-
இன்றோடு திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த நேரத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்ள முடியவில்லைதான். ஆனாலும் நாம் கொண்டாடலாம். இதுதான் இந்தப்படத்தின் மூலமாக எனக்கு கிடைத்திருக்கும் முதல் தேசிய விருதிற்கு கொடுக்கப்படும் நீதி என்று நினைக்கிறேன்.
என்ன ஒரு அனுபவம்.. எனக்கு தேசிய விருது கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவர்கள். ஆனந்ததில் பேச முடியாமல் திணறியவர்கள், என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இதுவரை நான் சந்திக்காத பலர் என்னை தூரத்தில் இருந்து தங்களுடைய அன்புள்ளம் கொண்ட இதயத்தால் ஆசீர்வதித்தனர்; வாழ்த்தினர். அவர்கள் அனைவரும், தாங்கள் தேசிய விருது பெற்றது போல என்னை உணரவைத்தனர். என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து கொடுத்த உங்களது ஆசீர்வாதம் எப்படியானது தெரியுமா?
என்னை தேசிய விருதிற்கு தேர்வு செய்த தேசிய விருது நடுவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெளியே எளிமையாக தெரியும் வேலையை கூட அவ்வளவு எளிமையாக செய்ய முடியாது என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
ஒரு சிறந்த நடிப்பு என்பது எடை இழப்பு, எடை அதிகரிப்பு, பிராஸ்தடிக் மேக்கப் அல்லது பெரிய உடல் ரீதியான மாற்றங்களோடு தொடர்புடையது கிடையாது. அது ஒரு சிறந்த நடிப்பின் ஒரு பகுதிதான். ஆனால் அதுவே முழு நடிப்பு அல்ல. அதை நான் எப்போதுமே செய்ய முயற்சித்து இருக்கிறேன். அது எனக்கு பெரிதளவு உதவியும் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை யாருக்கு விருது கிடைத்திருந்தாலும் அது நம் நால்வரும் பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும்.
காரணம், நான் நடிப்பில் முன்னணி நடிகர்கள் இவ்வளவு சமமாக பங்களித்த ஒரு படத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. ஆகையால் நாம் நால்வரும் இதனை பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பலம் பற்றி வலிமையாக குரல் கொடுத்ததற்கு நன்றி. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் இடத்தில் மேலே வருவது கடினம். நாங்கள் இன்னும் பல படங்களில் இணைந்து நடிக்க வேண்டியது இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.