விஜயகாந்த் படத்தின் கதையை சுட்டு ஷாரூக்கானுக்கு வடை தட்டும் அட்லீ..?

 
அட்லீ மற்றும் ஷாரூக்கான்

நடிகர் ஷாரூக்கான் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய இந்திப் படத்தின் கதை, நடிகர் விஜயகாந்த் நடிப்பில் ஏற்கனவே வெளியான படத்தின் காப்பி என  சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக கால்பதித்தவர் அட்லீ. இந்த படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட போது, இது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘மௌனராகம்’ படத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் பலர் கருத்து கூறினர். அதை தொடர்ந்து முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ ‘தெறி’ என்கிற படத்தை எடுத்தார். அது மணிரத்னம் எழுத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘சத்ரியன்’ படத்தை தழுவி உருவாக்கப்பட்டது என கூறப்பட்டது.

பிறகு, விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார் அட்லீ. இதில் மெர்சல் படம் கமல்ஹாசனின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்றும், ‘பிகில்’ இந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ‘சக்தே இந்தியா’ படத்தை நினைவுப்படுத்துவதாகவும் உள்ளது என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

ஆனால் கமல்ஹாசன் மெர்சல் படத்துக்கும் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஆனால் அதை ரசிகர்கள் ஏற்பதாக இல்லை. அடுத்ததாக அட்லீ நடிகர் ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது மிகவும் அதிரடியான படமாக தயாராகவுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் ஷாரூக்கான் உளவுத்துறை அதிகாரியாகவும், ஆண்டி-ஹீரோவாகவும் நடிக்கும் விபரம் தெரியவந்துள்ளது.

இதை எங்கேயோ கேட்ட கதை போல உள்ளது என மோப்பம் பிடித்த நெட்டிசன்கள் சிலர், இது எந்த படத்தின் கதை என்பதை கண்டுப்பிடித்து விட்டனர். விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்திலும் இதே கதை தான் இருக்கும். ஹீரோ விஜயகாந்த் கிரிமனல்லாகவும் இருப்பார், கடைசியில் உளவுத்துறை அதிகாரி என்பார். இதனால் நெட்டிசன்கள் பலர் இயக்குநர் அட்லீயை சராமாரியாக கலாய்த்து கருத்து கூறி வருகின்றனர்.


 

From Around the web