சூர்யா போனால் என்ன..!! அசால்டு செய்யும் இயக்குநர் பாலா..!!

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. படத்தில் கதாநாயகனாக அருண் விஜய்யும், நாயகியாக ரோஷினி பிரகாஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வணங்கான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. 
 
இயக்குநர் பாலா

விறுவிறுப்பாக தயாராகி வந்த ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா வெளியேறிய நிலையில், அப்படம் தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளார் இயக்குநர் பாலா.

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் தயாரான படம் வர்மா. இப்படம் முழுமையாக தயாரான பிறகு வெளிவராமல் போனது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இயக்குநர் பாலா, அடுத்ததாக ஒரு வெற்றிகரமான படத்தைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அப்போது அவருக்கு நடிகர் சூர்யா கைக்கொடுத்தார். தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அடுத்து உருவாகும் படத்தை இயக்குவதற்காக பாலாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். மேலும் அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடிக்க முன்வந்தார்.

வணங்கான் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுடன் இயக்குநர் பாலா

அதை தொடர்ந்து ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு துவங்கியது. நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்துக்கு ‘வணங்கான்’ என்று பெயரிடப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் மத்தியில் படத்துக்கான எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து தான் விலகுவதாகவும், வணங்கான் படத்தை தயாரிக்கப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டார். அதை ஏற்றுக்கொண்டு பாலாவும் தன் பங்குக்கு அறிக்கை வெளியிட்டார். அதில், வணங்கான் படம் வேறொரு நடிகர் தயாரிப்பில் உருவாகும் என்று கூறினார்.

வணங்கான் படப்பிடிப்பில் அருண் விஜய்

மேலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட கீர்த்தி ஷெட்டியும் படத்தில் இருந்து விலகிவிட்டார்.  தற்போது வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பணிகளை பாலா மீண்டும் துவங்கியுள்ளார். கதாநாயகனாக அருண் விஜய்யும், நாயகியாக ரோஷினி பிரகாஷ் என்பவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜடா’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மீண்டும் துவங்கப்பட்டுள்ள வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அருண் விஜய் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

From Around the web