இயக்குநர் ஷங்கருக்கு தடை..? பூதாகரமாகும் இந்தியன் 2 விவகாரம்..!

 
இயக்குநர் ஷங்கருக்கு தடை..? பூதாகரமாகும் இந்தியன் 2 விவகாரம்..!

தெலுங்கு, இந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில் ஷங்கர் படங்களை இயக்குவதற்கு தடைவிதிக்க வேண்டும் என இந்தியன் 2 பட தயாரிப்பு நிறுவனமான லைகா கேட்டுக்கொண்டுள்ளது.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில் தெலுங்கு மற்றும் இந்தியில் படங்களை இயக்குவதாக அறிவித்தார் ஷங்கர்.

இதை எதிர்த்து லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. அதில் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்கக்கூடாது என மனுவில் லைகா தெரிவித்திருந்தது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் இருதரப்பினரும் பேசி பிரச்னையை தீர்த்துகொள்ள உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் லைகாவுடன் ஷங்கருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இந்த பிரச்சினையில் இருதரப்புக்கும் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் லைகா நிறுவனம் தெலுங்கு, இந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடிதம் தொடர்பான தகவல்களை இருதரப்பினரும் இன்னும் உறுதி செய்யவில்லை. எனினும், ஷங்கருக்கு இதனால் சிக்கல் எழலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. இரண்டு மொழிகளில் ஷங்கர் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ள படங்களும் மிகுந்த பொருட்செலவில் தயாராகின்றன. அதனால் ஷங்கரை ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளர்கள் லைகாவுக்கு சாதகமாகவே செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

From Around the web