கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கு..??

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
dhanush

வரலாற்று பாணியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. மரியாதை என்பது சுதந்திரம் என்கிற டேக்லைனுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரை, நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

captain miller

இலங்கையின் வடமாராச்சி தாக்குதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த 1987-ம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான போர் நடந்து வந்தது. அப்போது வடமாராச்சியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாமை மனித வெடிகுண்டு கொண்டு புலிகள் தகர்த்தனர்.

இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிர் தியாகம் செய்தவர் கேப்டன் மில்லர் என்று பின்நாளில் குறிப்பிடப்பட்ட வல்லிபுரம் வசந்தன். இந்த தாக்குதலை மட்டும் கருவாக எடுத்துக் கொண்டு, வேறொரு காலக்கட்டத்தில் வேறொரு இடத்தில் நடப்பது போன்ற கதையமைப்பில் கேப்டன் மில்லர் படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 


தமிழக ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர், தனுஷின் பிறந்தநாளான ஜூலை 26-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


 

From Around the web