தொழில்நுட்ப காரணங்களுக்காக ‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..?
 

 
1

பி.வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘சந்திரமுகி’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.

Chandramukhi 2

இந்த நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர்.ஜி.ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. செப்டம்பர் 28-ம் தேதி விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’, ஜெயம் ரவியின் ‘இறைவன்’, ஹரீஷ் கல்யானின் ‘பார்கிங்’, சித்தார்த்தின் ‘சித்தா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web