சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸுக்கு தேதி குறித்த படக்குழு..!!
கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. பி. வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் படங்களில் வசூலில் முன்னிலை பெற்ற படமாக இன்றளவும் சந்திரமுகி படம் தான் இருக்கிறது.
தற்போது இதனுடைய இரண்டாவது பாகத்தை பி. வாசு இயக்கி முடித்துள்ளார். லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் லக்ஷ்மி மேனன், மகிமா நம்பியார் மற்றும் சிருஷ்டி டாங்கே கதாநாயகிகளாக நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ‘சந்திரமுகி’ஆக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் மற்றும் காட்சியமைப்பு உள்ளிட்டவை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்திரமுகி 2 படத்தை கன்னடம் மற்றும் தெலுங்கில் பி. வாசு இயக்கிவிட்டார்.
அதனால் தமிழில் உருவாகும் சந்திரமுகி 2 அந்த படங்களின் ரீமேக்கா என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும், சந்திரமுகி முதல் பாகத்துக்கும் சந்திரம் 2-ம் பாகத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மட்டும் படக்குழு தரப்பில் உறுதியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.