உங்கள் படத்தின் பெயரை மாத்துங்க.. இல்லாட்டி நடவடிக்கை.. எல்ஐசி நிறுவனம் எச்சரிக்கை..!

 
1

லியோ படத்தைத் தயாரித்த செவன் ஸ்கிரீன் நிறுவனம் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லவ் டுடே படத்தை இயக்கி, நடித்தவரான பிரதீப் ரங்கநாதன்தான் இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புல்லட் பாடல் புகழ் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு எல்ஐசி அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு சமீபத்தில்தான் பூஜை போட்டனர். பூஜை போட்டதுமே பிரச்சினை வெடித்தது.  இயக்குநர் எஸ்.எஸ். குமரன் என்பவர், இது எனது படத்துக்கு நான் பதிவு செய்துள்ள தலைப்பு. இதை திருடி விட்டனர் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

இப்போது வேறு மாதிரியான பிரச்சினை விக்னேஷ் சிவன் படத்துக்கு வந்துள்ளது. மத்திய அரசின் எல்ஐசி நிறுவனம், விக்னேஷ் சிவனுக்கும், செவன் ஸ்கிரீன் நிறுவனத்துக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். அதில் எல்ஐசி என்பது பதிவு செய்யப்பட்ட வணிக பிராண்ட் ஆகும். இதை உங்களது படத்தின் தலைப்பாக வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இப்படி பெயர் வைத்திருப்பது எங்களது நிறுவனத்தின் மீதான நன்மதிப்பை இது குறைத்து விடும். எனவே இந்த நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் உங்களது படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும், வேறு பெயரை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்ஐசி நிறுவனமே இப்போது களம் இறங்கி விட்டதால் விக்னேஷ் சிவன் படத்தின் தலைப்புக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை மாற்றுவார்களா அல்லது எல்ஐசி நிறுவனத்துடன் சட்டரீதியில் மோதுவார்களா என்று தெரியவில்லை.

From Around the web