கனா பட இயக்குநரின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு..!

 
கனா பட இயக்குநரின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அட்லி இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் அருண்ராஜா காமராஜா. நடிப்பு மட்டுமில்லாமல் தெறி, காக்கி சட்டை, பீட்சா போன்ற படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் பாடல்களும் பாடியுள்ளார்.

ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை இவர் தான் எழுதினார். அந்த பாடலை இவர் தான் பாடவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இவர் இயக்கிய ‘கனா’ தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

கடந்த 2019-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ஆர்டிகள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஷிவாங்கி, ஆரி ஆர்ஜுனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அருண்ராஜாவின் மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். 38 வயதாகும் அவர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

From Around the web