நடிகர் சித்தார்த்துக்கு கொலை மிரட்டல்- இந்தியளவில் டிரெண்டான ஹேஷ்டேக்..!

 

பாஜக-வினர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி நடிகர் சித்தார்த் தெரிவித்ததை அடுத்து அவருக்கு ஆதரவாக இந்தியளவில் #IStandWithSiddharth என்கிற ஹேஷ்டேக் டிரண்டிங்கில் இருந்தது.

கொரோனா தடுப்பூசி பற்றியும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார். அதற்கு பாஜக-வினர் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதை தொடர்ந்து சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடிகர் சித்தார்த்தின் தொலைப்பேசி எண் சமூகவலைதளங்களில் பரவியதாக கூறப்படுகிறது,

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த், “என் தொலைப்பேசி எண் சமூகவலைதளங்களில் பாஜக-வினரால் பரவவிடப்பட்டுள்ளது. இதுவரை எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் விடுத்த அழைப்புகள் வந்துவிட்டன. அந்த நபர்கள் பேசிய அழைப்புகளை பதிவு செய்து காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டு இருந்தார்.

அதை தொடர்ந்து நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் #IStandWithSiddharth என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியளவில் நேற்று இரவு முழுக்க டாப் டிரெண்டிங்கில் இருந்தது. 
 

From Around the web