நடிகர் தனுஷின் தாய் தாக்கல் செய்த வழக்கில் சரத்குமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
1

சென்னை தி நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள கோல்டன் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாய் விஜயலட்சுமி மற்றும் திருநாவுக்கரசு, நுஷ்ரத் அபிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கில், உரிய அனுமதியுடன் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளி மேல்தளத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை குடியிருப்புவாசிகள் தடுப்பதாகவும், தரைத்தளத்தில் உள்ள நடிகர் சரத்குமார் சட்டவிரோதமாக பொது பகுதியை ஆக்கிரமித்து, வணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், மற்றும் செந்தில்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் குடியிருப்பின் பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவதை தடுப்பதாகவும், இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

From Around the web