கபாலி போஸுக்கு விளக்கம் கொடுத்த தோனி!

 
1

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன் தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 24ஆது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 226 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து, நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, பயிற்சியாளர் பிளெமிங், அம்பத்தி ராயுடு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தோனியிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பினர். அவர், ரஜினிகாந்த் நடித்த கபாலி பட ஸ்டைலில் போஸ் கொடுத்திருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது குறித்து தான் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த இரு படங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் யாரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த தோனி கூறியிருப்பதாவது: இது ஒப்பீடு இல்லை. ரஜினியின் போஸைத் தான் காப்பி அடிக்க முயற்சித்தோம். ஆனால், அவரைப் போன்று செயல்கள் செய்வதும், யோசிப்பதும் கடினம். அவரைப் போன்று ரொம்பவே கஷ்டம். அதனால், தான் அவரது போஸை காப்பி அடிக்க முயற்சி செய்தோம் என்றார். இந்த வீடியோவை சிஎஸ்கே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாளை 21 ஆம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 29ஆவது போட்டி நடக்கிறது. இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்த சிஎஸ்கே அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

From Around the web